வியாழன், 24 ஏப்ரல், 2014

ஆண்டி கூட அறிவான்


சோறு தர சேற்றில்
கால் பதிக்கும் உழவனின்
கட்டிய மனைவி
காலத்தின் கோலத்தால்
சோக‌த்தை சும‌ந்து
நிலைகுலைந்து நிற்கின்றாளே!

சோற்றுக்கு அழும்
பிள்ளைக‌ளைப் பார்ப்பாளா
தோற்று த‌விக்கும்
க‌ண‌வ‌னைப் பார்ப்பாளா
க‌ண் க‌ல‌ங்கி நிற்க‌
அவ‌ளின் ப‌சி
அவ‌ளே ம‌ற‌ந்திட்டாளே!

பாடுப‌ட்டு காத்த‌ ப‌யிர்
ப‌ரித‌விக்க‌ விட்ட‌த‌னால்
தான் பெற்ற‌ உயிர்க‌ளைக் காக்க‌
ஒருவேளை சோற்றுக்குக்
க‌ரைந்துருகும் மெழுகைப்போல்
உருக்குலைந்து போனாளே!

வ‌ற்றாத‌ காவிரி
வ‌ழிமாறி போன‌தும்
ப‌ருவ‌த்து மேக‌ங்க‌ள்
உருமாறி ஒளிவ‌தும்
வாடிக்கையான‌தில்
வ‌ள‌மிழ‌ந்து வாழ்க்கையைத்
தொலைத்துத் த‌விக்கின்றாளே!


வாடிய‌ப் ப‌யிரைக்
க‌ண்ட‌போதெல்லாம்
வாடிப்போகும்
உழ‌வ‌ர்க‌ளின் உயிர்க‌ள்
ஆண்டுக்கு 18300 பேரென‌
அறுவ‌டையாவ‌தை
ஆண்டி கூட‌ அறிவான்
ஆண்ட‌வ‌னுக்குத் தெரிய‌லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக