செவ்வாய், 29 ஏப்ரல், 2014

உயிர் தானம்


வறண்டு போன ஆற்றின்
வண்டலும் வாரப்படுவதைப்போல்
பசியால்வாடும் ஏழை விவசாயிக்கு
நீரும் நிராகரிக்கப்பட்டால்
மனம் தாங்குமா துயரத்தை?- இல்லை
உடல் ஏற்குமா இந்த உயிரை.

சுப்ரமண்ய பாரதியைக் கூப்பிடு
இன்னும் ஒருமுறை இங்கு தோன்றவிடு
புண்ணிய பூமி எனும் தமிழ்மண்ணில்
தனிமனித உணவுக்குக்
குரல் கொடுத்த சிந்தனைச்சிற்பி
தண்ணீருக்கா பின் வாங்குவான்?

கூப்பிடுமுன்,உறுதிகொள்-அவனுக்காவது
தடங்கலின்றி தண்ணீர் கிடைக்க‌
அவனின் வற‌ண்டு போகாத குரல்
இந்த மண்ணில் ஒலித்தால் தான்
நமக்கும் கூட உறைக்கும்
நம் தாகம் தெரியும் தர‌ணிக்கும்.

ஆற்றுநீரை நம்பி,நாற்று நட்டு
நேற்று வரை சேற்றில் சிந்திய இரத்தத்தில்
வளர்ந்த பயிர் சாய்ந்து கருத்ததில்
கர்ணன் தர்மத்தைத் தாரை வார்த்ததுபோல்
சோற்றுக்கு வழியில்லாத போதும்-தமிழக‌
விவசாயி தானம் தருகிறான் தன் உயிரை
ஆண்டவருக்கு.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக