புதன், 9 ஏப்ரல், 2014

அழவைத்து போனாயே.


விளையாடி மகிழ்ந்திருந்து

வீட்டுக்கு வந்திடுவாய் என்றிருந்தேன்

வந்து சேராமல்-கண்ணே

வீதிக்கு என்னை வரவைத்தாயே

 

முப்பதடி ஆழ்துளையில்

வீழ்ந்தாலும் பிழைத்திடுவாய் என்றிருந்தேன்

விதி செய்த சதியாலே-செல்லமே

சொல்லாமல் எமலோகம் போனாயே

 

ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமென

அளவாய் தான் பெற்றிருந்தேன்

இனி உன்னைக் காணாமல்- கண்ணே

எப்படி உயிர் வாழ்வேன் நானே.

 

அடுதடுத்து குழந்தைகள் வீழ்ந்து மடிந்தும்

ஆழ்துளையை மூடாமல்-உன்னையும்

அழித்துவிட்டார்களே பாவிகள்- செல்லமே

பெத்த வயிறு பத்தி எரியுதே

 

யாருக்கு தீங்கிழைத்தோம்

யார் குடியை நாம் கெடுத்தோம்

ஏனம்மா எனக்கிந்த நிலை – கண்ணே

காலமெலாம் அழவைத்து போனாயே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக