புதன், 14 அக்டோபர், 2015

மறையோனும் விழையானோ?



வந்தாரை யெல்லாம்
வரவேற்று வாழவைத்த
நேற்றைய மனிதர்களின்
நேர்மை, ஈகையோடு
மனித நேயத்தையும்
இழந்து நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

பழைய நாட்களில்
பள்ளிக்கு வழியனுப்பும்
பாட்டிகளின்
பரிவும், உறவும்
தழுவி நிற்கும் பாசத்தை
எட்டிய தூரம் வரை
என் கண்களில் படவில்லை

பசியோடும்
தவிக்கும் மனசோடும்
தளர்ந்த உடலோடு
வாழும் பெற்றோரை
கை விடலாமோ?
விருட்சத்தைக் காக்க
கிளைக்கு நீர் வார்த்தால்
பயனுண்டோ?

முதுமை ஒருத்தரை
முடித்திடும் முன்பே
சுமக்கும் பொறுப்பை
அடுத்தவர் தோளில்
சேர்த்திட இயலுமோ?--பிள்ளை
என்றாலும் ஏற்குமோ?
மழை,பனியில் மட்டுமல்ல
ஈரம் கண்ணீரிலும் உண்டு

மடி சுரக்கும் பால்
பசி போக்கும்,
முகிழ் சுரக்கும் மழை
தாகம் தணிக்கும்,
கண் சுரக்கும் நீர்
மனிதம் காக்காதோ?—பழைய
மரபுகளை உயிர்ப்பிக்க
மறையோனும் விழையானோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக