வியாழன், 1 அக்டோபர், 2015

ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்


செழித்த வளத்தோடும்
செழுமையான மக்களோடும்
சொர்க்கமாய்த் திகழ்ந்த நாடு—இன்று
சிரிப்பை இழந்து நரகமாய் மாறி
சீரழியும் சிரியா

பாலஸ்தீன அகதிகள்
பல லட்சம் மக்களை
பண்போடு வரவேற்று
புகலிடம் தந்து காத்த வரலாற்று
பெருமை சிரியாவுக்குண்டு

இன்று நடக்கும் உள்நாட்டுப்போரில்
இறந்த உயிர்கள் இதுவரை
இலட்சங்கள் மூன்றைத் தாண்டும்
இழந்த உடைமைகளோ ஏராளம்
இருந்தும் வாய் திறக்காமல் உலகம்

வாழ்ந்த மண்ணை விட்டு
உயிர் பிழைக்க வழி தேடி
வெளியேறும் நாட்டு மக்கள்
விடியலில் வாழ்வா, சாவா
ஆண்டவனும் அறியாத உண்மை!

உடைமையும், உறவையும் துறந்து
உயிரைக் காத்திட தவிக்கும் மாந்தரை
கடலும், கடவுளும் கைகோர்த்து
குடும்ப உயிர்களை தனித்தனியாய்
பிரித்தழிப்பது என்ன வழிபாடோ!

கைவிட்டு நழுவும்
மனைவியும், குழந்தைகளும்
கண்ணெதிரே சாகும்போது—தாங்குமா
நெஞ்சம்?, என்ன பாடு பட்டிருக்கும்?
அறியாதவனா இறைவன்!

மரணத்தில் அழியும் மக்களைக்
காக்க எண்ணாத உலக நாடுகள்
அமைதி காப்பது
தான் வாழ்ந்தால் போதுமென்ற
நல்லெண்ணமோ!

மெத்தையில் படுத்திருப்பது போல்
குப்புற படுத்துறங்கும் ஐலன் குர்தியே
தலையை தண்ணீரிலும்
கால்களை கரையிலும் வைத்து
உலகுக்கு உண்மையை உணர வைத்தாயோ!

உனது நிரந்தர நித்திரையில் தான்
உறங்கிய உலகம் விழித்தெழுந்தது
அகதியாய் திரியும் சிரியா மக்களுக்கு
அகம் குளிர வைத்த பாலகனே—உனதாத்மா

 சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக