திங்கள், 26 அக்டோபர், 2015

நடந்த சம்பவம்


வடகிழக்கு மலை பிரதேசம்
குளிருக்கு தலைக் கவசம்
அணிந்திருக்கும் மலைகள்,
ஆதவன் எழாத இளங்காலைப்பொழுது
செடி, கொடிகளை போர்த்தி
பாதுகாக்கும் பனிமூட்டம்

வாகனம் இல்லா ஊரில்
ஊர் விட்டு ஊர் போக
பொருட்களை சுமக்க
மலை வாழ் பெண்கள் நால்வரோடு
நானும், உதவியாளரும்
நடை பயணம் துவங்க

ஊர்போய் சேர
ஒத்தையடி மலைப்பாதை
இருமருங்கும் அடர் காடு
பனிமூட்டம் மூடி மறைக்க
சுமை தூக்கி வந்தவரும்
கண்களூக்கு எட்டவில்லை

ஒலிக்கும் பறவையின் குரலும்
ஓடி, ஒளியும் விலங்கின் சலசலப்பும்
சஞ்சலம் தந்து என்னை சாய்த்துவிட
சறுக்கி, உருண்டு,
ஒரு மரத்தின் வேரைப்பிடித்துத்
தொங்கிய நான் கூச்சலிட

சுமையை போட்டுவிட்டு
ஓடி வந்து ஒரு கையால்
என்னைத் தாங்கி பிடித்து
மறு கையால் தன்னையும் காத்து
என்னை காப்பாற்றிய—அந்த
மலை வாழ் பெண்ணை
மறக்குமா என் மனம்?

கரணம் தப்பினால்
மரணமென்று அவள் அறிந்திருந்தும்
என்னைக் காத்தருளிய அவளை
கடவுளென கைகூப்பி வணங்கி
நன்றியை தெரிவித்தபோதும்—என்
நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை

அடுத்த ஊரை அடைந்து
அமைதி திரும்பியபின்
நினைத்து பார்த்து சிரித்துகொண்டேன்
வாகனம் இல்லா ஊரில்
எமனும் வர தாமதித்ததால்
நான் பிழைத்துகொண்டேனோ!

(உதவியாகக் கொடுத்தவற்றை அந்த பெண்

ஏற்க மறுத்துவிட்டாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக